கற்பக விநாயகர் ஆலயம்
வரலாறு
கற்பக விநாயகர் ஆலயம்
விநாயகர் அருள் பெற்று தமிழால் இணைவோம்.
தற்போது சுவிற்சலாந்தின் வோ(Vaud) மாநிலத்தில் Prilly எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான இந்து ஆலயமாகும். இவ்வாலயம் சுவிசில் இரண்டாவதாக தொடங்கப்பட்டது. வோ மாநில பக்தர்களின் விருப்பமான, மனங்களிலெல்லாம் நிறைந்து மக்களின் குறை தீர்த்து கற்பக விநாயகராக நீண்டகாலமாக எழுந்தருளியுள்ளார்.
இவ்வாலயம் 1993ம் ஆண்டிலிருந்து இன்று வரை மிகவும் சிறப்பாக எம்மக்களின் துன்பங்கள் நீக்கி அருள் பாலித்துக் கொண்டு வருகின்றார். இந்துமத சித்தாந்தங்களாகிய அறம், பொருள், இன்பம் என்பவற்றை விளக்கும் பரிவார மூர்த்திகளையும் இவ்வாலயம் உள்ளடக்கியுள்ளது.
இவ் ஆலயத்தின் மூலவர் அருள்மிகு பிள்ளையாரும் பரிவார மூர்த்திகளாக துர்க்கை அம்மன், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை அம்மனுடன், ஆஞ்சநேயர், நவக்கிரங்கள், பைரவர், சண்டேஸ்வரர். ஓவ்வொரு ஆண்டும் நடைபெறும் வருடாந்த மிகப் பெரும் திருவிழாவில் (12 நாட்கள் கொடியேற்றத்திலிருந்து பைரவர் மடை வரை) பல பக்தர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்கின்றனர்.
இத்திருவிழா ஆங்கில மாதமாகிய ஜுன் கடைசி , ஜுலை தொடக்கத்தில் (தமிழ் மாதத்தில் ஆனி கடைசியில்) நடைபெறுகின்றது.


புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழத்தொடங்கிய நாங்கள் தொடக்கத்தில் பல சொல்லொனா வேதனைகளை அனுபவித்தோம். கடின உழைப்பு, காலநிலை மாற்றங்கள், உறவுகளைப் பிரிந்து வாழும் ஏக்கங்கள், உறவுகளின் இழப்பு, மனஅழுத்தம் என்பன. இந்நிலையில் எமக்கு ஓர் ஆறுதுல், மனஅமைதி வேண்டி ஓர் வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
அதன் பயனாக திரு. பாஸ்கரலிங்கம் தலைமையில் ஓர் வழிபாட்டுத்தலமாக கற்பக விநாயகர் ஆலயம் வைகாசி(மே) 26, 1993 அன்று றெனா(Renens) எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சில ஆண்டுகளாக ஆலயம் மக்களின் ஆன்மீக, மனஅமைதி மற்றும் கலாச்சார செழுமையை சிறப்பாக மேன்படுத்தி வந்தது. பின்னர் இடப்பற்றாக்குறை மற்றும் மேலும் சில அசௌகரியங்களினால் கார்த்திகை (நவம்பர்) 2, 1998 முதல் இன்று வரை Prilly எனுமிடத்தில் சிறப்பாக அருள்பாலித்து வருகிறார்.
தற்போது பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இடப்பற்றாக்குறை, வாகனத்தரிப்பிடம் இல்லாத குறை அத்துடன் ஒர் கட்டிடத்தொகுதியின் கீழ்ப்பகுதியில் எமது ஆலயம் உள்ளது. மேலும் சில நடமுறைச்சிக்கலாலும் புதிய ஆலயம் கட்டுவதென தீர்மானித்தோம். மேலதிக விபரங்களை அடுத்துள்ள கட்டுமானப் பகுதியில் பாருங்கள்.